பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறப்பு

பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-07 18:22 GMT

பரமக்குடி, 

பார்த்திபனூர் மதகு அணையில் வைகை தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்து பரளை ஆற்றில் வெள்ளநீர் போக்கி வழியாக வினாடிக்கு 750 கன அடி முதல் 1000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனம் பருவமழையின் மூலம் பெறப்படும் தண்ணீரை நம்பி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக வைகை அணையில் இருந்து பெறப்பட்ட வைகை நீர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 104 கண்மாய்களுக்கும் மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது.

நீர் ஆதாரம்

குறிப்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் மொத்த கொள்ளளவு 7 அடியில் 6 அடி தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தலை மதகில் மட்டும் உள்ள 7 போக்கிகளுடன் கூடுதலாக 2 போக்கிகள் அமைக்கப்பட்டதன் மூலமாக வினாடிக்கு 1,850-ல் இருந்து 2000-ம் கன அடி கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் வீணாவது தடுக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள உள்கட்டமைப்புகள் மூலம் நீர் ஆதாரங்கள் சேமிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன், தாசில்தார் தமிம் ராஜா, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உம்முல் ஜாமியா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்