தர்மபுரி ராமாக்காள் ஏரியில் குப்பைகள், பிளாஸ்டிக்கை அகற்ற கோரிக்கை

தர்மபுரியில் உள்ள ராமாக்காள் ஏரியில் குவிந்துள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-10-13 19:00 GMT

தர்மபுரியில் உள்ள ராமாக்காள் ஏரியில் குவிந்துள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கழிவு பொருட்கள்

தர்மபுரி நகரையொட்டி அமைந்துள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக ராமாக்காள் ஏரி உள்ளது. கிருஷ்ணகிரி சாலையில் உள்ள இந்த ஏரியில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேங்கும் பரப்பு உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் அதிக அளவில் தேங்கும்போது தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதேபோல் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும்போது நீர்ஆதாரத்தை பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏரியின் கரையோர பகுதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகளும் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தர்மபுரி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ராமாக்காள் ஏரியில் தண்ணீர் கணிசமான அளவில் தேங்கி உள்ளது. இந்த ஏரியின் கரையோர பகுதிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக ஏரியில் சுற்றுச்சூழல் சீர்கேடு பாதிக்கப்படும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

பரிசல் சவாரி

இதுதொடர்பாக தர்மபுரியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

தர்மபுரி நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள ராமாக்காள் ஏரி இயற்கை எழில் நிறைந்த சூழலுடன் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சீசன் காலங்களில் வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. இப்போது கணிசமான அளவில் தண்ணீர் தேக்கி உள்ள நிலையில் ஏரியின் கரையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி நீர் சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது.

இந்த ஏரியில் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். இந்த ஏரியில் பரிசல் சவாரியை தொடங்க சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்