தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Update: 2024-11-15 21:27 GMT

தென்காசி,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. வெயிலே இல்லை. பின்னர் மாலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கரை பகுதிகளில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தொடர் மழையால் திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மலையில் உள்ள நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்