எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்... ஆனால் - துரைமுருகன் ஆவேசம்
எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர்,
வேலூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:-
தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பார்கள், எதிர்க்கட்சி எப்படி வியூகம் வகுக்கும், நமது கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு எப்படி ஓட்டு போடுவார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். கடந்த தேர்தலில் நான் ஏமாந்ததற்கு காரணம், கொரோனா வந்ததால் நான் படுத்துவிட்டேன்.
என்னால் வேகமாக சென்று வர முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன். சிலர் சேர்ந்து துரோகங்களை நடத்தி விட்டார்கள். அதுவும் எனக்கு தெரியும். ஆகையால் துரோகிகளை களையெடுத்து விட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு.
எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவனை மன்னிக்க மாட்டேன். இந்த கட்சிக்கு துரோகம் செய்வதை விட உலகத்தில் கொடுமை இருக்க முடியாது. கடந்த முறை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து விட்டேன். அதன் விளைவு தான் பல பாடங்கள் எனக்கு கற்பிக்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதனை கட்சி நிர்வாகிகள் பொது மக்களிடையே கொண்டு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.