20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.