இந்திய குடியரசு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்
குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் நகர் பகுதியில் வசித்து வந்த ஏழை எளிய பட்டியல் இன மக்கள் 230 பேருக்கு 2018-ம் ஆண்டு கொண்டசமுத்திரம் ஊராட்சி கல்லேரி கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 5 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை வருவாய்த்துறை சார்பில் அந்த மனைகளை அளந்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. பலமுறை வருவாய் துறையில் மனு அளித்தும், போராட்டங்களை நடத்தியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் வீட்டுமனையை அளந்துகொடுக்க வலியுறுத்தியும், நிலத்திற்கான வழியில் பள்ளம் தோண்டி, முள்வேலி அமைத்த நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீண்டாமை வேலியை அகற்ற வேண்டியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தலித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சாமபுஷ்பராஜ் வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் த.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் தாசில்தார் சித்ராதேவி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு இருப்பதால் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கோர்ட்டு வழக்குகளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.