விருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விருத்தாசலம் தி.மு.க. கவுன்சிலர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கடலூர்
பள்ளி தாளாளர்
விருத்தாசலம் மேட்டுக்காலனி நந்தனார்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 63). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, விருத்தாசலத்தில் மழலையர் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியில் படித்து வந்த 5 வயது யு.கே.ஜி. மாணவி கடந்த 11-ந்தேதி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு அழுது கொண்டே சென்றாள். மேலும், சிறுமி அணிந்திருந்த உடையில் ரத்தக்கறைகளும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், இது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.
பாலியல் தொல்லை
அப்போது அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிந்தது. இது பற்றி அவரது தாய் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்த போது, பள்ளி தாளாளர் பக்கிரிசாமி தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பக்கிரிசாமியை மகளிர் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் பக்கிரிசாமியின் கொடுஞ்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பக்கிரிசாமியை விருத்தாசலம் மகளிர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.