வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.

Update: 2023-10-10 21:30 GMT
கோவை


கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.


வ.உ.சி. உயிரியல் பூங்கா


கோவை மாநகரின் மையப்பகுதியில் நேரு விளையாட்டு அரங்கம் அருகே வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு முன்பு சிங்கம், கரடி, புலி, மான் மற்றும் பறவைகள் இருந்தன.

ஆனால் மாநகராட்சி பூங்காவில், சிங்கம், புலி, கரடி போன்றவற்றை பரா மரிக்க, மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் தடை விதித்தது. இதனால் அங்கிருந்த சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் சென்னை வண்டலூர் பூங்காவுக்கு மாற்றப்பட்டன.


இதையடுத்து உயிரியல் பூங்காவை புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், பூங்கா குறைந்தபட்சம் 25 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும் என்றும் மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் அறிவுறுத்தியது.


அனுமதி ரத்து


அதை ஏற்று மாநகருக்கு வெளியே இடம் தேடப்படுவதாக அளித்த உறுதியை ஏற்று, வ.உ.சி., உயிரியல் பூங்காவுக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் பூங்கா இடமாற்றம் செய்யப்படவில்லை.

இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவின் அனுமதி புதுப்பிக்கப் படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கேட்டு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.


ஆனால் பூங்காவில் கட்டமைப்பு குறைபாடு மற்றும் இயற்கை சூழல் இல்லை என்று கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அனுமதியை கடந்த ஆண்டு ரத்து செய்தது. மேலும் பூங்காவை பராமரிக்க தமிழக உயிரியல் பூங்காவுக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியது.


விலங்குகள் இடமாற்றம்


இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பூங்காவுக்குள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் அங்குள்ள மான், முதலை, பாம்புகள், பறவைகள் வனத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.


இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-


கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா நாட்டிலேயே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பூங்காவாக திகழ்ந்தது. பூங்கா தொடர்ந்து செயல்பட அனுமதி கிடைக்காததால் அங்குள்ள விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்பட பிற உயிரியல் பூங்காக்க ளுக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்