பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைப்பு

பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-25 20:20 GMT

பாலியல் புகார்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து கடந்த 3-ந் தேதி கல்லூரி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் 17 பேர் கடந்த 23-ந்தேதி கல்லூரி முதல்வரை சந்தித்து, சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதமும் கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாகா கமிட்டி அமைப்பு

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைத்து கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், திருச்சி கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் தன்னார்வ அமைப்பு உறுப்பினர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இந்த கமிட்டி முன்பு, அடுத்த வாரம் இருதரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆஜராகும்படி கல்லூரி முதல்வருக்கு திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்