விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குளத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை, கைது செய்ய கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூர் கிராமத்தில் தர்மகுளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்த புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை சிலர் வெட்டி கடத்த முயன்றனர்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தடுத்து நிறுத்தினர். மேலும், இதுகுறித்து வருவாயத்துறையினருக்கும் அவர்கள் தகவல் தொிவித்தனர்.
அதன்பேரில், அதிகாரிகள் விரைந்து சென்று டிராக்டர், மற்றும் வெட்டிய மரங்களை பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
முற்றுகை போராட்டம்
மேலும், தாலுகா அலுவலகத்துக்கு பறிமுதல் செய்து எடுத்து செல்லப்பட்ட, டிராக்டரை வெட்டப்பட்ட மரங்களுடன் அதிகாரிகள் விடுவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரடைந்த கிராம மக்கள், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைச்செயலாளர் சேகர் தலைமையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கை மனு
பின்னர், விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமியை சந்தித்து மனு ஒன்றை அவர்கள் கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் உள்ள தர்ம குளத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் தனிநபர் மரங்களை வெட்டியுள்ளார். நாங்கள் அவர்கள், மீது நடவடிக்கை எடுக்க தெரிவித்தும், அவ்வாறு மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பாக போலீசில் எந்த வழக்கும் பதியப்படவில்லை. அதேநேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தடி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் லூர்துசாமி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.