வன்முறை எங்களது நோக்கம் இல்லை: என்.எல்.சி. பிடியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு விடுதலை வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

வன்முறை எங்களது நோக்கம் இல்லை என்றும், என்.எல்.சி.யின் பிடியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு விடுதலை வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-07-28 19:11 GMT

விருத்தாசலம், 

போராட்டம்

நெய்வேலியில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் திலகபாமா, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், ஜெகன், கார்த்திகேயன், மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், வன்னியர் சங்க பொதுச்செயலாளர் வைத்தி, மாவட்ட தலைவர் தடா.தட்சணாமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆலய மணி, மாநில மாணவரணி தலைவர் கோபிநாத், முன்னாள் மாணவர் அணி செயலாளர் விஜயவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், பசுமை தாகம் தலைவர் ஏர்டெல் சரவணன், பசுமைத்தாயகம் செயலாளர் விநாயகம், இளைஞர் அணி தலைவர் ரத்தினவேல் ஏ.சி.மணி, மாணவரணி விநாயகம், இளைஞர் சங்க துணைச் செயலாளர் கார்த்தி, ஒன்றிய நகர செயலாளர்கள் புஷ்பா ஆனந்தராஜ், கோபால், தயால், சகாதேவன், தினேஷ், பிரபாகரன், செந்தில், பிரேம், நட்ராஜ், சுதாகர், சோழன், வினோத், ஆனந்த், பாலமுருகன், பால்ராஜ் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூக்கம் வரவில்லை

கடலூர் மாவட்டத்தை என்.எல்.சி. பிடியில் இருந்து விடுவிப்பதற்காக பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டத்தை அறவழியில் நாங்கள் நடத்தினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென காவல் துறையினர் எங்களது தொண்டர்கள் இருவரை பிடித்து தாக்கினர். இதனால் சிறிது நேரம் பதற்றமாக இருந்தது. அதன்பிறகு அனைத்தும் சரியாகி விட்டது.

கடந்த ஓராண்டு காலமாக 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களை அமைதியாக நடத்தினோம். வன்முறையில் ஈடுபட வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை. அதே வேளையில் தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். விவசாய பயிர்களை என்.எல்.சி. நிறுவனம் எந்திரங்கள் மூலம் நாசப்படுத்திய வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை.

விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் டெல்டாகாரன்தான் என்று சொன்னால் மட்டும் போதாது. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது. வேளாண் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தினால் மட்டும் போதாது. விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். என்.எல்.சி. பிடியில் இருந்து இந்த மாவட்டத்திற்கு விடுதலை கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் 66 ஆண்டு காலமாக என்.எல்.சி. நிர்வாகம் இந்த மாவட்டத்தை நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது. 8 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 800 அடிக்கு கீழ் சென்று விட்டது. இந்த மாவட்ட மக்களுக்கு வேலை கிடையாது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. இழப்பீடும் கொடுக்கவில்லை. நிலம் கொடுத்தவர்கள் அனாதையாக, அடையாளம் இல்லாமல் இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆதரவாக செயல்படுகிறது

என்.எல்.சி. நிர்வாகத்திற்காகதான் நிலத்தை மக்கள் கொடுத்தனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரியை சுரண்டி, சுரண்டி தனியாரிடம் விற்றுக்கொண்டிருக்கிறது. வெளிச்சந்தையில் விற்கின்றனர். அப்படி இருக்கும்போது இன்னும் நிலம் வேண்டும் என கேட்கிறார்கள். என்.எல்.சி.யிடம் இன்னும் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை தனியாரிடம் விற்க உள்ளது.

அப்படிஇருக்கும் போது இப்போது ஏன் இந்த தி.மு.க. அரசு விவசாயிகளிடம் நிலங்களை பிடுங்கி என்.எல்.சி.யிடம் கொடுக்க வேண்டும்? எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்கும் தி.மு.க. அரசு இந்த என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதில் ஏதோ ஒரு உள் கணக்கு இருக்கிறது. அது என்ன கணக்கு என்றுதான் தெரியவில்லை.

வருத்தமாக உள்ளது

தற்போது என்.எல்.சி. மின்சாரம் தமிழ்நாட்டிற்கு தேவை கிடையாது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆகிவிட்டது என 2 மாதத்திற்கு முன்பு அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அது மட்டுமின்றி வெளிச்சந்தையில் நாங்கள் மின்சாரத்தை விற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் சூழ்நிலையில் எதற்காக நிலத்தை கையகப்படுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் கொடுக்கிறீர்கள்?

மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் நமக்கு உணவு கொடுப்பது இந்த மண் தான். அந்த மண்ணை காப்பாற்ற வேண்டும். அந்த புரிதல் கூட இந்த தமிழக அரசுக்கு இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

ஏன் அச்சுறுத்துகிறீர்கள்?

2006-ல் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தான் நாங்கள் கையகப்படுத்துகிறோம் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நிலத்தை கையகப்படுத்தினால் 5 ஆண்டிற்குள் அந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அப்படி இருக்கும் போது இப்போது காவல்துறையை வைத்துக்கொண்டு ஏன் இப்படி அச்சுறுத்துகிறீர்கள்? தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தி 36 ஆயிரம் மெகாவாட்.

ஆனால் தமிழகத்தின் தேவை வெறும் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான். தேவைகளை விட தனியார் துறையிலும், அரசு துறையிலும் 2 மடங்கு மின்சார உற்பத்தி அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 5 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை தமிழக அரசு உற்பத்தி செய்ய உள்ளது. இவ்வளவு மின் மிகை மாநிலமாக உள்ள நேரத்தில் ஏன் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்.

எரிசக்தி மூலம் மின்சாரம்

விவசாய நெற்பயிர்களில் கதிர் வரும் நேரத்தில் அவை அழிக்கப்படும் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. இந்த உணர்வு ஏன் விவசாய சங்கங்களுக்கு வரவில்லை. மற்ற கட்சிகளுக்கு வரவில்லை என எனக்கு தெரியவில்லை. மற்ற கட்சிகள் எல்லாம் கூடுதலாக விலை கொடுத்தால் போதும். வேலை கொடுத்தால் போதும் எனக் கூறுகிறார்கள்.

இன்னும் 7 ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 50 சதவீத அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிறகு எதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறீர்கள். தமிழ்நாடு அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். தயவு செய்து நிலத்தை கையகப்படுத்துவதை விட்டு விட வேண்டும். இந்த மண்ணையும் மக்களையும் காக்க நாங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம். அதனால் விவசாயிகளிடமே நிலத்தை மீண்டும் கொடுத்து விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்