அரியலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, பின்னர் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி புரட்டாசி மாதம் 1-ந்தேதியான நேற்று வந்தது. அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் பொன்னுசாமி அரண்மனை தெரு, பெரிய அரண்மனை தெரு, எத்திராஜ் நகர், மணியன் குட்டை, எருத்துகாரன்பட்டி, கிருஷ்ணர் தெரு, மார்க்கெட் பகுதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 அடி முதல் 10 அடி உயரம் கொண்ட 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து, தேரடியில் உள்ள மங்காய் விநாயகர், சின்னக்கடைவீதியில் உள்ள பிரசன்ன சக்தி விநாயகர், ஆலந்துறையார் கோவிலில் உள்ள விநாயகர், தட்டரை தெரு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிலைகள் 4 முதல் 5 நாட்கள் அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டு பின்னர் மருதையாற்றில் கரைக்கப்படும்.