உப்பூரில் வெயிலுகந்த விநாயகர்- சித்தி,புத்தி திருக்கல்யாணம்
ராமநாதபுரம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர்- சித்தி,புத்திக்கு திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர்- சித்தி,புத்திக்கு திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
ராமநாதபுரம் அருகே உப்பூரில் ராமர் வணங்கிய பெருமையுடைய வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தி திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து விநாயகர் சித்தி, புத்தியுடன் கோவில் அருகே உள்ள அலங்கார கொட்டகைக்கு நேற்று மாலை 3 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் விநாயகர் சித்தி, புத்தியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் பூஜைகளை சுப்பிரமணியன், மணிகண்டன் சந்திரசேகர் சிவாச் சாரியார்கள் செய்தனர். பக்தர்கள் விநாயகருக்கு மொய் எழுதி காணிக்கை செலுத்தினர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் மட்டும் தான் விநாயகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3.30 மணிக்குமேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
தீர்த்தவாரி
நாளை 31-ந்தேதி உப்பூர் கிருஷ்ணன் மண்டகப் படியார் நிகழ்ச்சியாக விநாயகர் கடலில் தீர்த்தமாடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இதனைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூ இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் இரவு 7 மணி அளவில் விநாயகர் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற உள்ளது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், உப்பூர், கடலூர் கிராமத்தார், வெட்டுக்குளம் வாசுதேவன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உப்பூர் கிருஷ்ணன், குமரய்யா, கடலூர் ஊராட்சி தலைவர் முருகவள்ளி பாலன், அரிராம், சத்துணவு கணேசன், நாகநேந்தல் முருகானந்தம்,வளமாவூர் திருமலை, மயிலூரணி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடு
திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் உதவியாளர் தேவதாஸ் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.