கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்

என் குப்பை, என் பொறுப்பு என்பதை உணர்ந்து கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-10-31 18:45 GMT

ஊட்டி, 

என் குப்பை, என் பொறுப்பு என்பதை உணர்ந்து கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுரை வழங்கினார்.

தூய்மை பணிகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தலைகுந்தா பகுதியில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் அம்ரித் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார், ஊராட்சி தலைவர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து தூய்மை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்.

அங்குள்ள சாலையோரங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். குப்பைகளை அகற்றி மரக்கன்றுகளை நடும் படி, ஊராட்சி தலைவருக்கு அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வைப்பதுடன், தங்கள் பகுதி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

கழிவுநீர் கால்வாய்கள்

அந்த குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்வதுடன், சுற்றுப்புறத்தை பாதுக்காக்க முடியும். வீடுகளில் சேகரமாகும் காய்கறி குப்பைகள், வீணான உணவுப்பொருட்களை கழிவுநீர் கால்வாய்களில் கொட்டுவதால், அடைப்பு ஏற்படுவதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நாம் வசிக்கும் கிராம பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தூய்மையை கடைப்பிடித்தால் மட்டுமே எவ்வித நோய் தொற்றுக்கும் ஆட்படாமல் சுகாதாரமாக வாழ்ந்திட முடியும்.

மேலும் பொதுஇடங்கள், சுற்றுலா தலங்கள், கோவில் வளாகங்களுக்கு செல்லும் போது குப்பைகளை "என் குப்பை என் பொறுப்பு" என்ற நிலையை உணர்ந்து, ஒவ்வொருவரும் அதற்கென அமைக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதின் மூலம் சுகாதாரம் முழுமையாக பாதுக்காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்