வங்கி சேவைக்காக பல கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் பயணிக்கும் நிலை உள்ளது.

வங்கி சேவைக்காக பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கிராம மக்கள்

Update: 2022-11-26 18:52 GMT

வங்கி இல்லை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம், சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப் பகுதியாகவும், அப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் தாய் கிராமமாகவும் உள்ளது. இப்பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இதில் நெல், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம் போன்றவற்றை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். மேலும் விக்கிரமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், துணை தபால் நிலையம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது இங்கு வங்கி இல்லை. கடந்த 1982-ம் ஆண்டு விக்கிரமங்கலம் பெருமாள் கோவில் வீதியில் தொடங்கப்பட்டு, கடந்த 2002-ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. 20 ஆண்டுகள் செயல்பட்ட அந்த வங்கியில் போதிய வாடிக்கையாளர்கள் இல்லை என்றும், வரவு, செலவினங்கள் குறைவாக இருந்ததாகவும் கூறி அந்த வங்கியை உடையார்பாளையத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட வங்கியுடன் இணைத்து விட்டனர்.

மன உளைச்சல்

இதையடுத்து பணப்பரிவர்த்தனை போன்றவற்றுக்காக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உடையார்பாளையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக பொதுமக்கள் 2 பஸ்களில் ஏறி, இறங்கி உடையார்பாளையத்திற்கு சென்று வங்கி சேவையை பெற்று திரும்புவதற்கு ஒரு நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதோடு, மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக பண பரிவர்த்தனைக்காக கைேரகைகளை முதியவர்கள் பதிவு செய்ய வேண்டியது உள்ளதால், அவர்கள் வங்கிக்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீண்டும் விக்கிரமங்கலத்தில் வங்கி கிளையை தொடங்க வேண்டும். அல்லது வேறொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 கிலோ மீட்டர் பயணித்து...

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முருகேசன்:- நான் எனது ஓய்வூதிய தொகை சம்பந்தமாக வங்கிக்கு செல்ல 20 கிலோ மீட்டருக்கு மேலாக பயணித்து, வங்கி சேவையை பெற வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நபருக்கும் வங்கி கணக்கு உள்ளது. எனவே விக்கிரமங்கலத்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டால், என்னை போன்று பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விக்கிரமங்கலத்தில் மீண்டும் ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையையாவது அமைத்து, செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி கிளை வேண்டும்

வியாபாரி சிவகுமார்:- விக்கிரமங்கலத்தில் வங்கி இல்லாததால் பொதுமக்களுக்கும், குறிப்பாக எங்களை போன்ற வியாபாரிகளுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. நாங்கள் தினமும் எங்கள் விற்பனை சம்பந்தமான வரவு, செலவுக்காக வங்கி சேவையை பெற 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரியலூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விக்கிரமங்கலத்தில் ஒரு வங்கி கிளை அமைத்தால், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அலைச்சல் ஏற்படுகிறது

கல்லூரி மாணவி பரமேஸ்வரி:- தமிழக அரசு செயல்படுத்தி உள்ள திட்டத்தின்படி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. எனக்கும் அந்த தொகை வழங்கப்படுகிறது. இதற்காக நான் 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை நாட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு சென்று வங்கி சேவையை பெறும்போது, அலைச்சல் ஏற்படுவதோடு, ஒரு நாளில் பல மணி நேரம் அதற்காகவே செலவழிக்கும் நிலை உள்ளது. எனவே உடனடியாக விக்கிரமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அமைத்து, மாணவிகள் உள்ளிட்டோரின் சிரமங்களை தவிர்க்க வேண்டும்.

கடன் பெறுவதில் சிரமம்

விவசாயி செந்தில்:- மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எந்த சலுகைகளையும் வங்கியின் மூலமாக எங்களால் உடனடியாக பெற முடியவில்லை. தூரத்தில் உள்ள வங்கிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் எங்களது அன்றாட விவசாய வேலைகளை விட்டுவிட்டு செல்ல வேண்டும். மேலும் விவசாய கடன் பெறுவது, மற்ற சலுகைகளை பெறுவது போன்றவற்றுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே விக்கிரமங்கலத்தில் ஒரு வங்கி கிளையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்