அடிக்கடி விபத்து:செம்மண் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்சோழத்தரம் அருகே பரபரப்பு

சோழத்தரம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செம்மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-29 18:45 GMT

சேத்தியாத்தோப்பு,

அடிக்கடி விபத்து

விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக கடலூர் மாவட்டம் சோழத்தரம் அடுத்த மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் ஏரியில் இருந்து செம்மண் அள்ளி டிப்பர் லாரிகள் மூலம் மாமங்கலம் வழியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அவ்வாறு செம்மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் மாமங்கலம் பகுதி சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. மேலும் லாரிகளில் இருந்து மண் பறப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

பேச்சுவார்த்தை

இதனால் பாதிக்கப்பட்ட மாமங்கலம் கிராம மக்கள் நேற்று காலை ஒன்று கூடியதுடன், அவ்வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அடிக்கடி விபத்து நடப்பதால் இவ்வழியாக லாரிகளில் மண் எடுத்துச் செல்லக்கூடாது என கூறி, லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை 10 மணி வரை மாற்றுப்பாதையில் மண் எடுத்துச் செல்வது எனவும், மற்ற நேரங்களில் குறைந்த வேகத்தில் வாகனங்களில் மண் எடுத்துச் செல்லப்படும் என போலீசார் கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் லாரியை விடுவித்து, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்