பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்காடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-17 21:42 GMT

ஏற்காடு:

ஆசிரியர் பணி இடைநீக்கம்

ஏற்காடு அருகே முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஹரிஹரன் பணிபுரிந்து வந்தார். அவர், மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறி தலைமை ஆசிரியர் புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஹரிகரனை பணி இடைநீக்கம் செய்தது.

ஆனால் தலைமை ஆசிரியர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியில் முற்றுகையிட்டனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இந்த போராட்டம் நடந்தது.

அதிகாரிகள் சமரசம்

தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் இந்த போராட்டம் நேற்று மாலை 6.15 மணி வரை நடந்தது. அப்போது தலைமை ஆசிரியர் மீது புகாராக கொடுங்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் உறுதி அளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று முளுவி கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்