குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-10-09 17:45 GMT

குடிநீர் கேட்டு...

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சியில் கண்ணுத்தோப்பு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

ஆனால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெடுந்தொலைவு தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மறியல்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்