அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
பேரணாம்பட்டு அருகே பழுதான சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்திற்கு செல்ல தாபா ஓட்டல் பகுதி மற்றும் வீ.கோட்டா ரோடு பாட்டை சாரதி அம்மன் அருகில் என இரண்டு சாலைகள் உள்ளன. இந்த இரண்டு சாலைகளும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வந்தனர்.
பழுதடைந்துள்ள இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி எருக்கம்பட்டு - கோட்டையூர் செல்லும் சாலையில் கிராம மக்கள் நேற்று அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பள்ளி மாணவர்களை பாதிக்கும் வகையில் மறியல் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
வழக்குப்பதிவு
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக எருக்கம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், இவரது மகன் ரஞ்சித் குமார், மற்றும் பாபு, ஜெகன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.