நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் மற்றும் மயான இடத்தை மீட்டுத் தரக்கோரி நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-30 10:41 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் மற்றும் மயான இடத்தை மீட்டுத் தரக்கோரி நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி எஸ்.டி.ஏ.சர்ச் தெருவை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் நேற்று காலையில் நாலாட்டின்புத்தூர் போலீஸ்நிலையத்திற்கு திரண்டு வந்தனர். போலீஸ் நிலையத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஊர் நாட்டாமை லெட்சுமணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் சந்தன மாரியம்மாள், புரட்சி பாரதம் மாவட்ட இளைஞர் அணி செயலளார் கலைச்செல்வன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் மற்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவிலையும், மயானத்தையும் மீட்டு தரக்கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயகுமார், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் எஸ்.டி.ஏ. சர்ச் தெருவில், ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள கல்லுடையப்பன் சுவாமி கோவிலுக்கு நாங்கள் ஆண்டு தோறும் பொங்கல் விழா அன்று அன்ன தானத்துடன் கோவில் கொடை நடைபெறும்.

இந்த கோவிலுக்கு தெற்கு பக்கம் எங்கள் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் முடுக்குமீண்டான் பட்டியில் எங்கள் சமுதாயம் தோன்றிய காலம் முதல், இறந்தவர்களை இங்கு தான் அடக்கம் செய்து வருகிறோம்.

ஆக்கிரமிப்பு

நேற்று முன்தினம் கல்லுடையப்பன் சுவாமி கோவில் மற்றும் மயானத்தை சுற்றிலும் சிலர் ஆக்கிமிரத்து கம்பி வேலி அமைப்ப தற்கு நிலகற்களை நட்டி கொண்டிருந்தார்கள். இந்த விவரம் அறிந்தவுடன் எங்களது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று கம்பி வேலி அமைப்பவர்களிடம் விசாரித் ததற்கு நில புரோக்கர் அமைக்க சொன்னதாக கூறினார்கள். நாங்கள் அந்த நில புரோக்கரை தொடர்பு கொண்டபோது, அவர் நான் தூத்துக்குடியில் இருக்கிறேன், என்னால் வரமுடியாது என்று கூறி விட்டார். எனவே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கல்லுடையப்பன் சுவாமி கோவில் மற்றும் மயான இடத்தை மீட்டு தரும்படியும், எங்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கிய நில புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர். இது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் அவர்கள் கொடுத்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட நில புரோக்கரை வரவழைத்து இடத்தை அளந்து சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்