தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு

ரிஷிவந்தியம் அருகே தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT

ரிஷிவந்தியம், 

சாலை மறியல்

ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரி நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று காலை நடைபெற்றது. அப்போது வழக்கம்போல் வேலைக்கு வந்த கிராம மக்களில் 75 பேர் மட்டும் வேலை செய்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்ததோடு, மற்றவர்களுக்கு தற்போது வேலை இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களுக்கும் வேலை வழங்கக்கோரி திடீரென அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரி பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன் மற்றும் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சோலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ஊரக வேலை உறுதி திட்ட அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 75 பேருக்கு வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் ஆதார் எண் இணைக்கப்பட்டு கண்டிப்பாக வேலை வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்