வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்களை மீட்க கோரி கிராமமக்கள் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2022-09-18 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

நண்பர்கள்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில்(30).

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பேரங்கியூர் பிடாகம் தென்பெண்ணையாற்றில் சக நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சதீஷ், செந்தில் ஆகிய இருவரையும் தேடினர். ஆனால் இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை கைவிட்டனர்.

சாலை மறியல்

இந்நிலையில் சதீஷ், செந்தில் ஆகிய இருவரின் உறவினர்கள் மற்றும் பேரங்கியூர் கிராம மக்கள் நேற்று காலை கரடிப்பாக்கம் பஸ் நிறுத்தம் முன்புள்ள சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடும் பணியில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட  போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பிறகு போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து குமரகுரு மற்றும் பொதுமக்கள் தென்பெண்ணையாற்றுக்கு சென்று மாயமான வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேடும் பணி தீவிரம்

இந்நிலையில் ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரு வாலிபர்களையும் தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகள் மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஊருக்குள் வெள்ளம் செல்வதைத்தான் நாங்கள் தடுத்து நிறுத்த முடியும். இதுபோன்ற உயிரிழப்பு சம்பவத்தை தடுக்க ஏற்கனவே உரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆட்டோக்கள் மூலம் மீண்டும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 பேரின் உடலையும் விரைவாக கண்டெடுக்க ஏதுவாக, திருவண்ணாமலை சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்