கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதி கோரி பெற்றோர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2023-03-11 07:03 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகம் கடந்த 2 வருடங்களாக பூட்டி கிடப்பதாகவும், படிக்கும் மாணவர்களுக்கு கழிவறை உள்பட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பள்ளி முன்பு உள்ள ஈகுவார்பாளையம் - மாதர்பாக்கம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் அங்கு வந்த பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து போராட்டத்தில் ஈடுபட்டடவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பிரச்சினையை உடனே கொண்டுசென்று ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து சாலைமறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் ஈகுவார்பாளையம்- மாதர்பாக்கம் சாலையில் போக்குவரத்து 1 மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்