ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை

வேடசந்தூர் அருகே ரேஷன் கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதாக கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-12-22 19:00 GMT

வேடசந்தூர் அருகே கோவிலூர் ஊராட்சி செல்லக்குட்டியூரில் பகுதி நேர நகரும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் வழக்கம்போல் சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் ரேஷன் கடையில் ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதில் ஒரு மாதத்துக்கு முன்பே, ரவை மற்றும் கோதுமை மாவு காலாவதி ஆகி விட்டது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காலாவதியான பொருட்களுக்கு பதிலாக புதிதாக பொருட்களை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்