சேறும், சகதியுமான மண்சாலையால் கிராம மக்கள் அவதி

கூக்கல்தொரை பகுதியில் சேறும், சகதியுமான மண்சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-13 19:00 GMT

கோத்தகிரி

கூக்கல்தொரை பகுதியில் சேறும், சகதியுமான மண்சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

காய்கறி விவசாயம்

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இங்கிலீஷ் காய்கறிகள் மற்றும் மலைக்காய்கறிகளை பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூக்கல்தொரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர், இந்திரா நகர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விளைநிலங்கள், அருகே உள்ள விடிமுட்டி மற்றும் அன்னாய் ஆகிய பகுதிகளில் உள்ளன.

சேறும், சகதியுமாக...

இதற்கிடையில் அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராம மக்கள் வாகனங்கள் மூலம் விவசாய இடுபொருட்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து விளைந்த காய்கறிகளை விற்பனைக்கு வெளியிடங்களுக்கு எடுத்து செல்லவும் மண்சாலையை பயன்படுத்தி வந்தனர். பின்னர் தார்சாலையாக மாற்ற ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் திடீரென அந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்து சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சிறிய பாலம்

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள மண்சாலையின் ஒருபுறம் நீரோடை செல்கிறது. இங்கு மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சாலைக்கு தண்ணீர் வந்து, போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே அந்த இடத்தில் சிறிய பாலம் கட்டுவதோடு, மண்சாலையை மாற்றி தார்சாலை அமைத்து தர பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்