மடத்துக்குளம் அருகே மிக முக்கிய வழித்தடமாக உள்ள கிராமத்து சாலை, நான்கு வழிச்சாலையால் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
விபத்துக்கள்
மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு போன்றவை முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக மடத்துக்குளம் பகுதியில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் வேடப்பட்டி ஊருக்கு அருகில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வேடப்பட்டி மடத்துக்குளம் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு செல்வதற்கு உயர்மட்டப்பாலமோ, தரைமட்டப்பாலமோ அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினசரி விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது.
நீதிமன்றங்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்லவும், இடுபொருட்களை எடுத்து வரவும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் அறுவடை எந்திரம், டிராக்டர்கள் போன்றவற்றை இந்த சாலை வழியாக இயக்கி வந்தனர்.ஆனால் தற்போது சாலை துண்டிக்கப்பட்டு U வளைவு வழியாக சுற்றி செல்ல வேண்டியதுள்ளது. ஒரு சிலர் ஆபத்தான முறையில் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்று சாலையை கடக்கின்றனர்.நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முழுமையாக தொடங்கும்போது அதிக வேகத்தில் தொடர்ச்சியாக வாகனங்கள் கடந்து செல்லும். அப்போது U வளைவு வழியாக சாலையைக் கடக்க முயற்சித்தால் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக தாராபுரம், மெட்ராத்தி, துங்காவி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக இந்த சாலை உள்ளது. மேலும் வேடப்பட்டியிலிருந்து மடத்துக்குளம் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று வருகின்றனர். இவர்கள் அசுர வேகத்தில் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து தப்பி சாலையைக் கடப்பது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பகுதிக்கு அருகில் மடத்துக்குளம் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு போன்றவை அமையவுள்ளது. தினசரி நீதிமன்றங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள், வக்கீல்கள், போலீசார் உள்ளிட்ட பலரும் வருவார்கள். அப்போது நான்கு வழிச்சாலையை கடப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். அருகிலுள்ள மைவாடி சாலை, கருப்புசாமிபுதூர் சாலை, கணியூர் சாலை போன்றவற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக முக்கியமான வேடப்பட்டி சாலையில் உயர் மட்டப்பாலம் அமைக்கப்படாதது ஏன் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் உயர்மட்டப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.