சின்னசேலம் அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கிராம சபை கூட்டம்
சின்னசேலம் அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்டது பாண்டியன்குப்பம் கிராமம். கடந்த 2011-ம் ஆண்டு இக்கிராமத்தில் நடந்த சோலையம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது, இரு பிரிவினருக்கிடையே மோதல் உருவாகி கலவரமாக மாறியது.
இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஊராட்சியில் அரசின் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக அந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு நீடித்ததால் எந்த நிகழ்வுகளும் நடைபெற வில்லை.
இதையடுத்து கிராமத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனை பரிசீலித்த கலெக்டர் ஷ்ரவன்குமார், கடந்த வாரம் பாண்டியன்குப்பம் கிராமத்தில் நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவை முழுமையாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு...
இதைத்தொடர்ந்து பாண்டியன்குப்பம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் தாசில்தார் இந்திரா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணி மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வரவேற்றார்.
ஊராட்சி செயலாளர் பெரியசாமி வரவு-செலவு திட்ட அறிக்கையை வாசித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணை தலைவர் லதா, வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டின் வரவு-செலவுகளை வாசித்து ஊராட்சியின் ஒப்புதலுக்கு உட்படுத்தியும், சென்ற ஆண்டு தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது, சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள், மீதமுள்ள நிறைவேற்ற வேண்டிய பணிகள், கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ராமர் நன்றி கூறினார்.
பாண்டியன்குப்பம் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் நடைபெற்றதால் கிராம மக்கள் மிகுந்த எதிர்ப்பாா்ப்புடன் கலந்து கொண்டனர்.