கிராம சபை கூட்டம்

காந்திஜெயந்தியையொட்டி திருச்செங்கோடு, முத்துகாப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

Update: 2023-10-02 18:39 GMT

கிராம சபை கூட்டம்

திருச்செங்கோடு அருகே அணிமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை குறித்த கருத்துக்கள் அடங்கிய உரை காணொளி குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் பெண் குழந்தைகளுக்கான பாலின பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ராஜபாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, உதவி இயக்குனர் புரட்சி ஊராட்சிகள் அசோக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் வழங்கினர்.

முத்துகாப்பட்டி, நாமகிரிப்பேட்டை

நாமக்கல் அருகே உள்ள பெருமாபாளையம் மாரியம்மன் கோவில் அருகில் முத்துகாப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் அருள் ராஜேஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வரதராஜ், எருமப்பட்டி யூனியன் அலுவலக பற்றாளர் ரஞ்சிதம், ஊராட்சி செயலாளர் தேவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து படித்தனர். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பேசும்போது, முத்துகாப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் பொருட்டு அரசாங்க உத்தரவின் பேரில் ஆயிரம் பேருக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரது ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வேலைவாய்ப்பு கேட்டு ஆயிரத்து 170 பேர் மனு கொடுத்தனர் என்றும், நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் 900 பேர் வேலை வாய்ப்பு கேட்டு மனு அளித்தனர் என்று பேசினார். அத்துடன் ஊராட்சி பகுதியில் வீட்டு வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்கள் வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அதற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து வீட்டு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல் நாமகிரிப்பேட்டையில் உள்ள 18 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் வசதி திட்டம் என பல்வேறு திட்டங்களை 18 ஊராட்சிகளிலும் காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாமக்கல் மண்டல ஊராட்சிகளின் அலுவலர் ரவிச்சந்திரன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாலமுருகன், சரவணன், அரசு அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்