மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி
அரகண்டநல்லூரில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை வருகிற 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்வதற்காக சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோதண்டபாணிபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணியை விழுப்புரம் கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், விண்ணப்பம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் ஆவணங்களை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தகுதியுடைய பயனாளிகள் ஒருவர் கூட விடுபடாத வகையில் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதில் எவ்வித தவறும் நடைபெறக்கூடாது என்றார். அப்போது கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.