தேனி அருகே துணிகரம்:பெண் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தேனி அருகே பெண் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-03 18:45 GMT

டாக்டர் வீடு

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி மணி நகரை சேர்ந்த அறிவுடைநம்பி பாரி மகள் பூரணி (வயது 37). பல் டாக்டரான இவர், தேனியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 1-ந்தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு தோழிகளுடன் கேரள மாநிலம் குமுளிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு, மாடியில் உள்ள அறையின் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் ஒரு அறையில் பீரோவில் இருந்த துணிமணி, பொருட்கள் சிதறி கிடந்தன.

25 பவுன் நகை திருட்டு

மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி உள்பட 25 பவுன் நகைகள், வைர மோதிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து பூரணி தேனி அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர்.

அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள சாலை வரை ஓடி போய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் மாடியில் உள்ள அறைக்கு சென்ற அவர்களுக்கு நகை, பணம் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டின் முன்பக்க கதவை கம்பியால் நெம்பி உடைத்து பீரோவில் இருந்த பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்