கீழ்ப்பாக்கத்தில் துணிகரம்: அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை - 4 பேருக்கு வலைவீச்சு
கீழ்ப்பாக்கத்தில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில், பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல பூசாரி பழனி நேற்று காலை திறந்தார். அவர், காலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் பக்தை ஒருவர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்தார்.
கோவில் பூசாரி பழனி இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடைக்கப்பட்ட உண்டியலில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 4 பேர் மதில் சுவரை தாண்டி குதித்து கோவிலின் பின்பக்க கதவு வழியாக கோவிலுக்குள் புகுந்து இருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக வைத்து 4 கொள்ளையர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.