போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
தஞ்சை பாலாஜி நகர் பகுதிக்கு செல்லும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பழைய கோர்ட்டு சாலை, தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பல சாலைகள் ஒரு வழிசாலையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து வந்தாலும் பல இடங்களில் புதிதாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்வகையில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
பாலாஜி நகர் பிரிவு சாலை
தஞ்சை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ளது பாலாஜி நகர். இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவை உள்ளன. மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்து பாலாஜி நகருக்கு பிரியும் இடத்தில் பஸ் நிறுத்தம் நிழற்குடை இருந்தது. மேலும் இதன் அருகே சாலையோரம் மாநகராட்சி கட்டிடங்களும் இருந்தன.
இந்த நிலையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிக்காக வாய்க்கால்மீது இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மற்றும் அருகில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து இந்த சாலை அகலமாக காணப்பட்டது. மேலும் வாகனங்கள் எளிதாக சென்று வந்தன. நாளடையில் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களை தவிர, இதர வாகனங்கள் செல்வது சிரமமாகி வருகிறது.
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்
காரணம் பாலாஜி நகருக்கு சாலை பிரியும் இடத்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக மாலை 6 மணிக்குப்பிறகு இரவு 9 மணி வரை இதே நிலை காணப்படுகிறது. டீக்கடைக்கு டீ குடிக்க வருபவர்கள் மற்றும் இந்த பகுதியில் 2 மதுக்கடைகள் இருப்பதால் மது வாங்க வருபவர்கள் என பலரும் வாகனங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றனர்.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருப்பதால், அவசர தேவைகளுக்காக வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வழி இல்லாமல் சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் ஆட்டோ, கார், சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி திணறுகின்றன.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சில நேரங்களில் வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகனங்களை நிறுத்துவோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்படுகின்றன. இதனால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் கூட சிரமப்பட்டுக்கொண்டே செல்லும் நிலை தான் காணப்படுகிறது. இதே நிலை தான் தினமும் மாலை நேரத்தில் நடைபெறுகிறது.