தமிழக- கேரள எல்லையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
புளியரை ‘எஸ்’ வளைவில் லாரி பழுதானதால் தமிழக- கேரள எல்லையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரை வழியாக கேரள மாநிலத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து சிமெண்டு மூட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரியானது புளியரை 'எஸ்' வளைவு பகுதியில் நேற்று காலையில் சென்றபோது திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் இருமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ஆரியங்காவு அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பழுதான லாரியை அப்புறப்படுத்திய பின்னர் மதியம் 12 மணியளவில் போக்குவரத்து சீரானது.