வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது-விக்கிரமராஜா பேட்டி

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என விக்கிரமராஜா தெரிவித்தார்.

Update: 2023-07-14 18:23 GMT

ஜி.எஸ்.டி.யால் நெருக்கடி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக சிறு வியாபாரிகள் உழைக்க தயாராக உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வணிகர்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். வணிகர்கள் தொடர்பான தகவல்களை அமலாக்கத் துறையினருக்கு வழங்கி சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

மழையால் பாதிப்பு

தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என எண்ண தோன்றும். கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தான் தக்காளி வரத்து உள்ளது. வட மாநிலங்களில் மழையின் காரணமாக வரத்து பாதித்துள்ளது. மழைக்காலங்களில் காய்கறி விளைச்சல் பாதித்தும், மழை நின்ற பின் விளைச்சல் அதிகரித்து விலை குறையும். இதில் சேமிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தக்காளி அதிகமாக விளையக்கூடிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை போல் தக்காளியை அரசு கொள்முதல் செய்து வாங்க வேண்டும். அதனை பொடியாக்கி தட்டுப்பாடு காலத்தில் அரசு நியாயமான விலையில் வினியோகம் செய்யலாம். கடைகளில் விற்க வியாபாரிகள் தயாராக உள்ளோம். விலையேற்றத்திற்கும், வியாபாரிகளுக்கும் சம்பந்தமில்லை.

சுங்கச்சாவடி கட்டணம்

விவசாயத்தில் விளைச்சல், தேவை, தட்டுப்பாடு ஆகியவற்றை கணக்கிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி., மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவைக்கான தொகையை பொதுமக்களிடம் வாங்கி தான் அரசுக்கு கட்டுகிறோம். ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். அனைத்து பொருட்களுக்கும் வரி விதித்தால் வரி கட்ட தயாராக உள்ளோம். காா்ப்பரேட் நிறுவனங்கள் அரசை ஏமாற்றுகிறது. கார்ப்பரேட் நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு வேலை வழங்கப்படுவதில்லை.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தகுதியானவர்களை எம்.பி.க்களாக தேர்ந்தெடுப்போம். சரியான வேட்பாளரை ஆதரிப்போம். தக்காளி உள்பட உணவு பொருட்களின் விலைவாசி உடனடியாக குறைய வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்