கன்னியாகுமரி வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வாகன பேரணியில் பங்கேற்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 13-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் பா.ஜனதாவின் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார்.

Update: 2024-04-10 08:06 GMT

கன்னியாகுமரி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். குமரி மாவட்டத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நந்தினி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி குமரி மாவட்டத்துக்கு வந்து, பா.ஜனதா கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். குமரி மாவட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபிறகு பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும், பா.ஜனதா நிர்வாகிகளும் குமரிக்கு வந்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மதுரையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய வருகிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் காலை 8.30 மணிக்கு அவர் வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்படும் அவர் தக்கலை மேட்டுக்கடைக்கு 9 மணிக்கு செல்கிறார்.

பின்னர் தக்கலை- திருவனந்தபுரம் சாலையில் தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் வாகன பேரணியில் அமித்ஷா கலந்து கொண்டு, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பா.ஜனதா வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வாகன பேரணி நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அல்லது கேரள மாநிலம் புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்