ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதுதொடர்பாக சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் எப்போதுமே பொதுமக்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மளிகை, காய்கறியின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.
தக்காளி விலையை பொறுத்தவரையில், விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே சில்லறைக் கடைகளில் அதைவிட அதிகமாக ஒரு கிலோ ரூ.150-க்கும் விற்பதையும் பார்க்க முடிகிறது.
தக்காளிதான் இப்படி என்றால், இஞ்சி விலையைக் கேட்டால் நெஞ்சு வலி வந்துவிடும் போல் இருக்கிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் விற்பனை
தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட ரேஷன் கடைகள், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலையில் அதனை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டு, அதன்படி விற்பனையும் நடந்து வருகிறது. ஆனாலும் அது அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறிதான்.
அதுமட்டும் அல்லாது, சின்ன வெங்காயம், பீன்ஸ், பாகற்காய், மிளகாய் உள்பட முக்கிய காய்கறி வகைகளின் விலை 'கேட்டாலே ஷாக்' அடிக்கும் வகையில் எகிறிப்போய் இருக்கிறது.
மளிகை பொருட்களின் விலையோ மற்றொரு பக்கம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரிசி, துவரம் பருப்பு, சீரகம், சோம்பு, பூண்டு, மிளகாய், ஏலக்காய் மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றின் விலை கடந்த மாதத்தைவிட பெருமளவில் அதிகரித்து உள்ளது.
தக்காளி விலை கட்டுக்குள் வருவதற்கு இன்னும் 2 வார காலங்கள் ஆகும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறி வகைகள் வரத்தை பொறுத்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மளிகை பொருட்கள் விலையை பார்க்கும் போது, இப்போதுதான் உயர ஆரம்பித்து இருப்பதாகவும், இன்னும் வரக்கூடிய நாட்களிலும் உயருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இப்படியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதுதொடர்பாக சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
மிளகு
மிளகு வியாபாரி பிரபு (கே.சி.பட்டி):- பெரும்பாறை, கேசி.பட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் சுமார் 17ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மிளகு கொடிகள் ஜூன், ஜூலை மாதங்களில் பூக்க தொடங்கிவிடும். பின்னர் விளைச்சல் அடைந்து பிப்ரவரி மாதத்தில் அறுவடை தொடங்கும். மேலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிளகு அறுவடை முற்றிலும் முடிந்து விடும். அறுவடை நேரத்தில் கருப்பு மிளகு ரூ.400-க்கும், வெள்ளை மிளகு கிலோ ரூ.600-க்கும் விற்றது. தற்போது சீசன் முடிந்து விட்டதால் கருப்பு மிளகு ரூ.520-க்கும், வெள்ளை மிளகு ரூ.720-க்கும் விற்கிறது. தமிழகத்தில் கருப்பு மிளகு தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருப்பு மிளகு சில்லரை கடைகளில் கிலோ ரூ.650 வரை விற்கப்படுகிறது.
பூண்டு
பூண்டு விவசாயி மீனாட்சிசுந்தரம் (கொடைக்கானல்):- கொடைக்கானல் பகுதியில் பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி, குண்டுப்பட்டி, கிளாவரை, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஒரு தலை பூண்டு பிரபலமானது. பூண்டு ரகங்களில் மேட்டுப்பாளையம் பூண்டு விதைகள் சுமார் 90 நாட்களில் விளைச்சல் ஏற்படும். ஆனால் இவற்றை உடனடியாக உபயோகிக்க வேண்டும். இதற்கு மாறாக சிங்கப்பூர் பூண்டு விதைகள் பயன்படுத்தப்படுகிறது. இவை நடவு செய்யப்பட்ட 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இவற்றை ஒரு வருடம் வைத்து பயன்படுத்தலாம். கடந்த மாதம் வரை இதன் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை இருந்தது. தற்போது விளைச்சல் இல்லாததால் கிலோ ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
வியாபாரமும் குறைந்தது
மளிகை வியாபாரி முருகன் (திண்டுக்கல்) :- விளைச்சல், வரத்து குறைவால் மளிகை மற்றும் காய்கறிகளின் விலை உயர்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதமாக மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் அளவை குறைத்து விட்டது. இதனால் வியாபாரமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. பொருட்களின் மீது லாபம் என்பது இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களை விற்பனை செய்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதன்மூலம் வியாபாரமும் அதிகரிக்கும்.
நடுத்தர குடும்பங்கள் பாதிப்பு
இல்லத்தரசி புவனேஸ்வரி (பழனி) :- ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மளிகை பொருட்கள், காய்கறிகளை மாதாந்திர பட்ஜெட் போட்டு வாங்குகிறோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக காய்கறிகள், பருப்பு, சீரகம் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரித்து விட்டது. இது ஏழை, நடுத்தர குடும்பங்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெள்ளை மிளகு
நறுமண பொருட்களில் மிளகு மிகவும் முக்கியமானது. இது கருப்பு மிளகு, வெள்ளை மிளகு என இருவகைகளில் கிடைக்கிறது. மிளகு கொடிகள் பூத்து காய் விளைச்சல் அடைந்ததும் அதை பறித்து காய வைத்து தயார் செய்வது கருப்பு மிளகு ஆகும். அதேபோல் காயாக பறிக்காமல் கொடிகளிலேயே பழுக்க வைத்து பழமாக பறித்து தோலை நீக்கி தயார் செய்வது வெள்ளை மிளகு ஆகும். இந்த வெள்ளை மிளகு காரத்தன்மை அதிகம் கொண்டது. இதனால் விலையும் அதிகம் ஆகும். இதை வெளிமாநிலங்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கேரளா உள்பட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.