வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்
வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் நடந்தது.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் வீரவநல்லூா் பூமிநாத சுவாமி- மரகதாம்பாள் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்தடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து சுவாமி- அம்பாள் தேரை இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி நிலையத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) அம்பாள் தவசு, திருக்கல்யாண வைபவம் வீரவநல்லூரில் காந்தி சிலை அருகில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜெயந்தி மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.