மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.125 கோடியில் பல்வேறு திட்டங்கள்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் ரூ.125 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-06-11 16:43 GMT


ரூ.2 கோடியில் சி.டி.ஸ்கேன்

தமிழக அரசின் மகப்பேறு உதவித்தொகை, 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கேடயங்கள் வழங்குதல், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடந்தது.

இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். மகப்பேறு உதவித்தொகை, காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம், வில்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு கேடயங்கள் வழங்கி அமைச்சர் பேசியதாவது:-

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் புதிய சி.டி.ஸ்கேன் எந்திரம் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பூம்பாறை பகுதியில் ரூ. 87 லட்சம் செலவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

ரூ.125 கோடியில் நலத்திட்டங்கள்

பழனி அரசு மருத்துவமனை, மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.70 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் விரைவில் ஒரு கோடி பேருக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.

தாடிக்கொம்பு, பாப்பம்பட்டி, எரியோடு. வடமதுரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.8 கோடியே 47 லட்சம் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.125 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆர்.டி.ஓ. முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜதுரை, நகரச்செயலாளர் முகமது இப்ராகிம், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, துணை இயக்குனர்கள் வரதராஜன், டாக்டர் முத்துலட்சுமி, நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், அடுக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்