வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டிபூக்கள் விலை மீண்டும் உயர்வு:மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை

வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தேனியில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-08-24 18:45 GMT

பூக்கள் சாகுபடி

தேனி மாவட்டத்தில் கோட்டூர், சீலையம்பட்டி, கூழையனூர், உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர், மஞ்சிநாயக்கன்பட்டி, கண்டமனூர், கணேசபுரம் உள்பட பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தேனி, சீலையம்பட்டி பூமார்க்கெட்டுகளுக்கும், மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த மாதம் ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளிக்கிழமை போன்ற வழிபாட்டு நாட்கள் காரணமாக பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதம் முடிந்த நிலையில் பூக்கள் விலை குறையத் தொடங்கியது.

விலை உயர்வு

இந்நிலையில், ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி நோன்பு ஆகும். மேலும், வருகிற 29-ந்தேதி கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தேனி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 1 கிலோ சாதிப்பூ ரூ.400, முல்லைப்பூ ரூ.500, சம்பங்கி ரூ.170, செண்டுமல்லி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.300, ரோஜா ரூ.150, துளசி ரூ.30, மருகு ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் பலர் வந்து பூக்கள் வாங்கிச் சென்றனர். இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்