'வந்தே பாரத்' ரெயில் நெல்லை வந்தது

‘வந்தே பாரத்’ ரெயில் நேற்று நெல்லை வந்தடைந்தது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர்.

Update: 2023-09-21 21:47 GMT

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில் நாடு முழுவதும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை-நெல்லை

தமிழ்நாட்டுக்குள் சென்னை-கோவை இடையே ஒரு 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு 'வந்தே பாரத்' ரெயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. வருகிற 24-ந் தேதி முதல் நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில் பெட்டிகள் தெற்கு ரெயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ரெயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சோதனை ஓட்டம்

அதாவது, சென்னையில் இருந்து நேற்று காலை 7.40 மணி அளவில் 'வந்தே பாரத்' ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக நெல்லை சந்திப்பை பிற்பகல் 3.13 மணிக்கு வந்தடைந்தது. அதாவது இந்த ரெயிலுக்கு 7.50 மணி பயண நேரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நெல்லைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு பதில், 17 நிமிடங்கள் முன்னதாக அதாவது 3.13 மணிக்கே வந்து சேர்ந்தது.

அந்த ரெயிலில், ரெயில்வே இயக்க தலைமை பொறியாளர் முகுந்த் தலைமையில் அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களை நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் வரவேற்றார். மேலும் மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சோனா வெங்கடாசலம், நெல்லை ரெயில் நிலைய ஆலோசகர் கணேசன், நெல்லையப்பர் கோவில் அறங்காவலர் செல்லையா உள்ளிட்டோர் அதிகாரிகளையும், ரெயில் டிரைவர்களையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

ஆர்வமாக பார்த்த பொதுமக்கள்

புதிதாக 'வந்தே பாரத்' ரெயில் நெல்லைக்கு வந்ததை அறிந்த பொதுமக்கள், ரெயில்வே ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டவர்கள் ரெயிலை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் ரெயில் பெட்டிகளுக்கும் ஏறி அதில் உள்ள வசதிகளை பார்த்து வியந்தனர்.

ஒரு சிலர் இருக்கைகளில் அமர்ந்து 'செல்பி' எடுத்துக்கொண்டனர். ஏராளமானோர் பிளாட்பாரத்தில் ரெயில் முன்பும், ரெயில் படிக்கட்டு அருகிலும் நின்று தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்பதிவு எப்போது?

இந்த ரெயில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் வண்டி எண் 20632 என்றும், சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் வண்டி எண் 20631 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான டிக்கெட் முன்பதிவு அறிவிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிஉள்ளனர். இதுகுறித்து ரெயில்வே இயக்க தலைமை பொறியாளர் முகுந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இருந்து 'வந்தே பாரத்' புதிய ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு சோதனை ஓட்டமாக இயக்கி வந்துள்ளோம். இந்த ரெயில் போக்குவரத்தை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு பெட்டி எக்ஸ்கியூட்டிவ் பெட்டியாக உள்ளது. மொத்தம் 608 இருக்கைகள் உள்ளன.

நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலை தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வந்தோம். தண்டவாளம் மேம்படுத்தப்பட்ட பிறகு 130 கிலோ மீட்டராக வேகம் அதிகரிக்கப்படும்.

6 நாட்கள் இயங்கும்

இந்த ரெயிலில் சிறப்பு அம்சங்களாக ரெயில் நிலைய அறிவிப்புகள், இருக்கை சாய்வு வசதி, உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு எளிதான வசதிகள் உள்ளன. என்ஜின் தனியாக கிடையாது என்பதால் அந்த பகுதியில் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய முடியும். 'வந்தே பாரத்' ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'வந்தே பாரத்' ரெயில், நெல்லை சந்திப்பில் அதற்கென்று தனியாக மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு பிட்லைன் தண்டவாளத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. வருகிற 24-ந் தேதி காலையில் 1-வது பிளாட்பாரத்துக்கு எடுத்து வரப்பட்டு முதல் பயணத்தை தொடங்குகிறது. அதற்கான விழா ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்