வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 கல்லூரி மாணவர்கள் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
மானூர்:
நெல்லை அருகே மானூர் அடுத்துள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மகன் ஜெயராம் (வயது 18), சங்கரலிங்கம் மகன் உச்சி மாகாளி (18). இவர்கள் 2 பேரும் மானூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று வழக்கம் போல் 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர்.
மாலையில் கல்லூரி முடிந்ததும் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். ஜெயராம் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது. மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, எதிரே ஊத்துமலையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயராம், உச்சி மாகாளி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே, வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து உடனடியாக மானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.