பராமரிப்பு இல்லாத வால்பாறை பஸ் நிலையம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறையில் பராமரிப்பு இல்லாத பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2022-09-09 16:30 GMT

வால்பாறை

வால்பாறையில் பராமரிப்பு இல்லாத பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

பராமரிப்பு இல்லாத பஸ் நிலையம்

வால்பாறையில் நகராட்சி அலுவலகத்திற்கு முன்னால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பழைய பஸ் நிலையம் உள்ளது. அதனை சுற்றி போக்குவரத்து கழக கிளை மேலாளர், பொறியாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது. ஆனால் இந்த பழைய பஸ் நிலையம் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருந்து வருகிறது. அதேபோல் பணியாளர்களின் குடியிருப்புகள் எதுவும் பயன்படுத்தப்படாத நிலையில் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகம் உள்பட எந்த ஒரு அரசு துறைகள் சார்பிலும் அலுவலக கட்டிடங்களோ பொது மக்களுக்கான வளர்ச்சி பணிகளோ மேற்கொள்வதற்கு தேவையான இடங்கள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதனால் வளர்ச்சி பணிகளை பெறமுடியாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அந்த திட்டத்தை நிறைவேற்ற இடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு விடுகிறது. இந்த நிலையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள புதிதாக இடம் தேடுவதற்கு பதிலளிக்க அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

அந்த இடங்களை கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து புதிய திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விரிவாக்கம் செய்ய வேண்டும்

இந்த நிலையில் வால்பாறை மெயின் ரோட்டில் உள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 10 சென்ட் இடத்தை நகராட்சி நிர்வாகம் உரிய அரசு அனுமதியுடன் கையகப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் தற்போதுள்ள பழைய பஸ் நிலையத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக விரிவாக்கம் செய்து, நகராட்சி வணிக வளாகம், குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையில் நகராட்சி தங்கும் விடுதி, சுற்றுலா தகவல் மையம், ஒலிபெருக்கி வசதியுடன் போலீஸ் கண்காணிப்பு அறை அமைத்து கொடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் பயனற்ற நிலையில் இருந்து வரும் போக்குவரத்து கழகத்தின் இடத்தை கையகப்படுத்தி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்