எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் - வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-05-18 19:15 GMT

எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்்து செயல்பட்டால் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும் என வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

வைத்திலிங்கம் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

100 சதவீதம் எங்களுக்கு வாய்ப்பு

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டது சரி என்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கோர்ட்டின் தீர்ப்புக்கு உட்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான செயலாகும்.

கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். சட்டரீதியாக நாங்கள் பலமாக உள்ளோம். 100 சதவீதம் எங்களுக்குத்தான் வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து...

எடப்பாடி பழனிசாமி என்னை விட ஜூனியர். 1984-ம் ஆண்டு அவர் எடப்பாடி தொகுதியில் ஜனதா தளத்திற்கு வேலை பார்த்தவர். திராவிட வரலாறு, அ.தி.மு.க. வரலாறு பற்றி தெரியாதவர். அவருக்கு தேவை என்றால் சபரீசனுடன் ரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்.

இதுகுறித்து அவருடைய மனசாட்சிக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும்.

நிவாரணம் அறிவிப்பதில் தவறு இல்லை

விஷ சாராயம் அருந்தி 22 பேர் பலியாக காரணம் அரசின் மெத்தனப் போக்குதான். தமிழகத்திற்கு இது கேடு விளைவிக்ககூடிய சம்பவம். விஷ சாராயம் அருந்தி பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதை யாரும் தவறு என சொல்லக்கூடாது.

இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிவாரணம் அறிவித்ததை அரசியலாக பேசக்கூடாது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஜெயக்குமாருக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை

ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயக்குமார் எடுப்பார் கைப்பிள்ளை. அவர் எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக முடியாது. ராஜ்யசபா சீட்டு தனக்கு கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் கிளிப்பிள்ளை சொன்னது போல் யார் எதை சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை கூறிக்கொண்டு வருகிறார். அரசியலில் அவருக்கு எதிர்காலம் கிடையாது.

கொங்கு மண்டலத்தில் மாநாடு

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 95 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் நிறைய பேர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களிடம் வரும்போது கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம். அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த உள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எனக்கு எதிராக தஞ்சை மாவட்டத்தில் கூட்டம் நடத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி கூறியதன் அடிப்படையில் அவர் கூட்டத்தை நடத்தியுள்ளார். முதலில் ஆர்.காமராஜை அவருடைய சொந்த ஊரான மன்னார்குடியில் நின்று வெற்றி பெறச்சொல்லுங்கள். சொந்த தொகுதியில் முதலில் டெபாசிட் வாங்குவாரா? என பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அ.ம.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், ஓ.பன்னீர்செல்வம் அணி திருவாரூர் மாவட்ட செயலாளர் நாராயணசாமி, அ.ம.மு.க. மாநில நிர்வாகிகள் மலர்வேந்தன், சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்