"திரும்ப திரும்ப கவர்னர் ஆர்.என்.ரவி திருக்குறள் பற்றி தவறாக பேசுகிறார்" - வைகோ பரபரப்பு பேட்டி
தமிழக கவர்னர் திருக்குறள் குறித்து தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார் என திருச்சி விமான நிலையத்தில் வைகோ கூறினார்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருக்குறள் குறித்து கவர்னர் கூறியது குறித்தான கேள்விக்கு அவர் கூறியதாவது,
திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவ கருத்துக்களை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சன் பரிவார் இயக்கங்களுக்கு துணையாக கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் செயல்படுகிறார்.
திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட்சரை விடவா ஆராய்ச்சி செய்ய முடியும். அவர் சொல்லி இருக்கிறார், உலகிலே இதற்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்று. அவர் பௌத்த மதத்தில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் இல்லை, அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
அதைப்போல ஜி. யு போப்பும் சரியான முறையில் மொழி பெயர்த்து இருக்கிறார். தவறாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு கூட்டம் வேலை செய்வதற்கு, கவர்னர் துணை போவது துரதிஷ்டவசமானது.
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது, 'இன்னும் 14 மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர், திராவிட முன்னேற்றக் கழக அரசு, திராவிட மாடல் அரசு, ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அரசு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு, இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்.'
சட்டமன்றத் தேர்தல் விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்துவதாக மிரட்டக்கூடிய தோணியில் பாஜக தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்களே? 'அவர்கள் விருப்பத்திற்கு தங்களுடைய மனம் போன போக்கிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது' என்று கூறினார்.