கும்பகோணம் பாணபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா

கும்பகோணம் பாணபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா

Update: 2023-05-24 20:03 GMT

கும்பகோணம் பாணபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாணபுரீஸ்வரர் கோவில்

கும்பகோணத்தில் உள்ள பாணபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாணபுரீஸ்வர சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் தினமும் சாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், வருகிற 30-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் தக்கார் சிவசங்கரி மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

தேனுபுரீஸ்வரர் கோவில்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது தேனுபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருகிற 30-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 2-ந் தேதி திருமலைராஜன் ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் உபயதாரர்கள், கிராமமக்கள் செய்துள்ளனர்.

கர்ப்பரட்சாம்பிகை கோவில்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவில் இன்று(வியாழக்கிழமை) காலை வெள்ளி பல்லக்கும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. 26-ந்தேதி காலை வெள்ளி பல்லக்கும், இரவு பூத வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலாவும், இரவு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 27-ந்தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 1-ந்தேதி தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்