திருவாதவூர் திருமறைநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - 28-ந் தேதி மாங்கனி திருவிழா

திருவாதவூர் திருமறைநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந்தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது.

Update: 2023-05-24 20:49 GMT

மேலூர்

திருவாதவூர் திருமறைநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந்தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது.

திருவாதவூர் கோவில்

மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி மூலவரான திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கோவில் கொடிமரத்திற்கு, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் விழாவிற்கான நந்தி உருவம் பதித்த திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாங்கனி திருவிழா

இதையடுத்து, வருகிற 28-ந் தேதி அன்று பஞ்சமூர்த்திகளுடன், திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மேலூருக்கு எழுந்தருளும் மாங்கனி திருவிழா நடைபெறும். இது குறித்த கதை வருமாறு:-

மேலூரில் தற்போது சிவன் கோவில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்துள்ளது. அங்கு வயதான சிவாச்சாரியார் ஒருவர் தங்கியிருந்து அருளாசி புரிந்து வந்துள்ளார். அவர் தினமும் 8 மைல் தூரம் நடந்து சென்று திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மேலூருக்கு வந்து உணவு உட்கொள்வது வழக்கம். அப்போது மேலூரில் பணிபுரிந்த தாசில்தார் ஒருவர் அந்த சிவாச்சாரியாரின் தீவிர பக்தராக இருந்துள்ளார். மதுரையில் புதுமண்டபம் பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை பிரதிஷ்டை செய்து வழிபட தான் விரும்புவதாக சிவாச்சாரியார் அவரது பக்தரான மேலூர் தாசில்தாரிடம் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அப்போதைய மதுரை ஆங்கிலேய கலெக்டரிடம் அனுமதி வாங்கி மேலூரில் சிவாச்சாரியார் விருப்பம் படி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. வயது முதிர்ச்்சியடைந்த அந்த சிவாச்சாரியாரால் திருவாதவூருக்கு நடக்கமுடியாத நிலை ஏற்பட்டு உணவு அருந்தாமல் உடல் நிலை பாதிப்படைந்து சிவனை வழிபட முடியவில்லையே என மன வருத்தமடைந்தார். இந்த நிலையில் ஒரு நாள் சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய சிவன் பக்தரின் பக்தியை கண்டு தானே ஆண்டுக்கு ஒரு முறை நேரில் வந்து அருள்புரிவதாக கூறியுள்ளார். அன்று முதல் திருவாதவூர் கோவிலில் இருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் பல நூற்றாண்டுகளாக விழா நடைபெற்று வருகிறது.

28-ந் தேதி அன்று திருவாதவூர் கோவிலில் அதிகாலை திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்படுகிறார். வழி நெடுகிழும் பல்வேறு கிராமங்களில் மண்டகப்படிகளில் ஏராளமான பக்தர்கள் திருமறைநாதர்-வேதநாயகி அம்மனை வரவேற்று தரிசிப்பார்கள். அதனை தொடர்ந்து மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர்-வேதநாயகி அம்மன் எழுந்தருவார். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சியாக இப்போதைய தாசில்தாருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்படும். மேலூருக்கு சாமி வரும் போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மாங்கனிகளை பக்தர்கள் கூட்டத்தில் வீசி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

தேரோட்டம்

விழாவின் தொடர்ச்சியாக 31-ந் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்