வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடல்

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் வட நெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.;

Update:2023-04-27 11:30 IST

பாம்பு பண்ணை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.

பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் அரசு சார்பில் உரிமம் வழங்கப்பட்டு உறுப்பினர்களாக உள்ள 350 இருளர்கள் ஆண்டுதோறும் விஷ பாம்புகளை பிடித்து இந்த பாம்பு பண்ணைக்கு வழங்கி வருகின்றனர். இங்கு கொண்டு வரப்படும் பாம்புகள் மண் பானைகளில் பராமரிக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை தமிழக அரசின் அனுமதியுடன் மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர்.

இனப்பெருக்க காலம்

இந்த நிலையில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதாலும், பாம்புகளின் இனவிருத்தி அதிகரிக்க வேண்டும் என்பதாலும் வடநெம்மேலி பாம்பு பண்ணை வனத்துறை உத்தரவின்பேரில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்குள்ள 5 அடி உயர தொட்டியில் நூற்றுக்கணக்கான பானைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த கொடிய விஷமுள்ள நல்லபாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட 700 பாம்புகளை பாம்பு பண்ணை ஊழியா்கள் சாக்கு பைகளில் கட்டி எடுத்து சென்று காடுகளில் விட்டுவிட்டனர்.

வெறிச்சோடிய நிலையில்

எப்போதும் பாம்புகளுடன் கூடிய பானைகள் உள்ள தொட்டி பகுதி இதனால் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக நல்லபாம்பு, கட்டுவிரியன், சுருட்டை விரியன் போன்ற விஷ பாம்புகள் முட்டையிட்டு 65 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

கண்ணாடி விரியன் பாம்பு மட்டும் 40 முதல் 60 குட்டிகள் வரை போடும் தன்மையுடையது ஆகும். 6 மாதங்களுக்கு பிறகு பாம்பு பண்ணை மீண்டும் திறக்கப்பட்டு, அப்போது இருளர்கள் மூலம் விஷ பாம்புகள் வயல்வெளிகள், செடி, புதர்களில் இருந்து மீண்டும் பிடித்து வரப்பட்டு பார்வையாளர்கள் முன்பு காட்சி படுத்தப்பட்டு, விஷம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகள், பார்வையாளர்களால் களைகட்டி காணப்படும் இந்த பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதற்கிடையில் பாம்புகள் பிடித்து வந்து கொடுத்தால் மட்டுமே ஊதியம் என்ற நிலையில் பணியாற்றி வரும் பாம்புபிடி வீரர்கள் (பழங்குடி இருளர்கள்) மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம்போன்று, பாம்பு இனபெருக்க காலத்தில் தங்களுக்கும் அவர்களை போன்று நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்