மின்கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது - 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்

மின்கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் புத்தம் புதிய 40 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2023-03-02 11:46 GMT

சென்னை ஆவடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்துக்கு புனேயில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் இருந்து 40 புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. லாரியை மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் சதாம் உசேன் என்பவர் ஓட்டினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் லாரியை ஆவடி கவரப்பாளையம் அருகே சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று மாலை 3 மணியளவில் ஆவடியில் உள்ள விற்பனை நிலையத்துக்கு செல்ல மீண்டும் லாரியை அங்கிருந்து எடுக்க முயன்றார்.

அப்போது மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பியில் கன்டெய்னர் உரசியது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் சதாம் உசேன், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தூரமாக ஓடிவிட்டார்.

சிறிது நேரத்தில் கன்டெய்னர் பெட்டியில் 2 அடுக்கில் நிறுத்திவைத்திருந்த புத்தம் புதிய 40 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பலஅடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கன்டெய்னர் லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய விலை உயர்ந்த 40 மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து எலும்புகூடானது.

முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். தீ விபத்து குறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்