உப்பாறு ஓடையில் கொட்டப்படும் பாலிதீன் பைகளால் மாசுபடும் நீர்நிலை

குடிமங்கலம் அருகே உப்பாறு ஓடையில் கழிவுகள், பாலிதீன் பைகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது.

Update: 2023-07-21 17:57 GMT

குடிமங்கலம் அருகே உப்பாறு ஓடையில் கழிவுகள், பாலிதீன் பைகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது.

உப்பாறு ஓடை

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு செல்கிறது. உப்பாறு ஓடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

மாசடையும் நீர்நிலை

உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கழிவுகள், பாலிதீன் பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது.

உப்பாறு ஓடையில் நீர் செல்லும் இடங்களில் உப்பாறு ஓடையின் குறுக்கே பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

குடிமங்கலம் அருகே தடுப்பணையை ஒட்டியுள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் நீர் மாசடைவதோடு ஓடையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

நடவடிக்கை

குடிமங்கலம் பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு உப்பாறு ஓடை பயன்படுகிறது. உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து வருகிறது. ஓடையில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்