ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு: முன்னேற்பாடு பணிள் ஆய்வு
தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் ஆண்டுேதாறும் பொங்கல் பண்டிகையையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி கரூர் மாவட்டத்தில் இந்த ஓரு இடத்தில் மட்டும் தான் நடக்கும். இதையடுத்து இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஆர்.டி.மலையில் அடுத்த மாதம் 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு கிராமமக்கள் கடந்த 21-ந்தேதி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து கலெக்டர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி, அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை அளிக்குமாறு குளித்தலை ஆர்.டி.ஓ.விற்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தலைமையிலான அதிகாரிகள் ஆர்.டி. மலைக்கு வந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
ஆய்வு
அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், ஜல்லிக்கட்டு காளை வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான பாதுகாப்பு இடம், பார்வையாளருக்கான பாதுகாப்பிடம், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் இறுதியாக சென்று நிற்கும் இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து இடங்கள் மற்றும் மின் இணைப்பு வசதி, தீயணைப்பு வசதி, அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தனித்தனியாக ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து விழா கமிட்டியினரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
அறிக்கை அளிக்கப்படும்
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாட்டு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதோடு, கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஒப்பீடு செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்படும் என குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தெரிவித்தார்.
இந்தஆய்வின் போது குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி, ஜல்லிக்கட்டு விழா குழுவினர், நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் உடனிருந்தனர்.